டெல்லி:

டெல்லி நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் மூலம் தனது மகளுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது என்று, நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த 2012ம் ஆண்டு சிலரால் ஓடும் பேருந்தில் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. வரும் 22ந்தேதி காலை 7 மணிக்கு அவர்களை தூக்கில் ஏற்ற டெல்லி நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

நிர்பயாவின் தாயார்

வழக்கின் விசாரணையின்போது, நீதிமன்றம் வந்திருந்த நிர்பயா தாயார்,  டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது.  4 குற்றவாளிகளை தூக்கிலிடுவதன் மூலம் நாட்டிலுள்ள பெண்களுக்கு மேலும்  வலிமை கிடைக்கும். டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முன்னதாக, நீதிபதி முன்பு  நிர்பயா தாயிடம், குற்றவாளிகளில் ஒருவரான  முகேஷ் என்பவரின் தாயார், தனது மகனை, மன்னிக்கும்படி கெஞ்சினார். அதற்கு பதில் அளித்த நிர்பயாவின் தாயார்,   ‘எனக்கும் ஒரு மகள் இருந்தாள், ஆனால் அவளுக்கு நேர்ந்த கதி என்ன என்று உங்களுக்கு தெரியுமே. அதை என்னால் எப்படி மறக்க முடியும்’  என்று எதிர் கேள்வி எழுப்பினார்… இதனால் முகேஷின் தாயார் செய்வதறியாது திகைத்தார்.

இந்த உரையாடலை அங்கிருந்த நீதிபதி கவனித்துக் கொண்டிருந்ததை அறிந்த முகேஷின் தாயார், நீதிபதியிடம் போய்,  ‘என் மகனை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என் மகனுக்காக மன்றாடிக் கேட்கிறேன் என்று  கெஞ்சத் தொடங்கினார், ஆனால், நீதிபதி, இந்த விஷயத்தில் யாருக்கும்  கருணை காட்ட முடியாது என்று  கூறிவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்.

இந்த சம்பவங்கள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.