டில்லி: இஸ்லாமியர்களிடையே இந்தியாவில் மட்டும் முத்தலாக் முறை நிலவுவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர், நீபிதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இஸ்லாமியர்களிடம் வழக்கத்திலுள்ள முத்தலாக் என்ற விவாகரத்து, விஷயம் பற்றி விசாரிக்க துவங்கியுள்ளது.

உச்சநீதிமன்றம் – சல்மான் குர்ஷித்

மதம் தொடர்பான விஷயங்களில் நுழைவதில்லை எனவும், முத்தலாக் அங்கீகாரத்திற்கு உரியதா என்பது குறித்து மட்டுமே விசாரிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சந்தேகங்களை தீர்க்கும் அறிவுரையாளராக வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியின் சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டு இருக்கிறார். குர்ஷித் இன்று நீதிமன்றத்தில் “ தனிப்பட்ட முறையில், முத்தலாக் என்பது பாவகரமானது என்பதே எனது கருத்து. ஆனால், பாவகரமானது எதையும், இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஷரியத் சட்டத்தில் பாவகரமான முத்தலாக்கிற்கு அனுமதி இருக்காது” என்றார் குர்ஷித்.

பிற நாடுகளில் முத்தலாக் விவகாரம் எப்படியுள்ளது என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு, இந்தியா தவிர வேறு நாடுகளில் முத்தலாக் நடைமுறை இல்லை என்று குர்ஷித் பதிலளித்தார். பிற உலக நாடுகளில், ஆறு முறை முத்தலாக் கூறினால் அதை ஒருமுறை என்றே கணக்கில் கொள்ளப்படுகிறது என்றும், சல்மான் குர்ஷித் பதிலளித்தார்.