டில்லி,

முத்தலாக் வழக்கில் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. அத்துடன் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையில், 5 சமுதாயத்தை சேர்ந்த வெவ்வேறு நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன பெஞ்சு முத்தலராக் வழக்கை விசாரித்து வருகிறது.‘

தலாக் முறையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கோடை விடுமுறைக்கால அமர்வு கடந்த 11ம் தேதி முதல் 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் சார்பாக, முத்தலாக் 1400 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமுதாய நடைமுறை என்று கூறியது.

ஆனால், நீதிபதிகள் தலாக் முறை மற்ற நாடுகளில் பின்பற்றப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தலாக் சட்டத்தை ரத்து செய்தால் என்ன செய்வீர்கள் என்று மத்தியஅரசுக்கும் கேள்வி விடுத்தினர். அப்போது மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர், முத்தலாக் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘முத்தலாக் பாவச் செயல் என கூறுகிறார்கள். பாவச் செயல் எப்படி மதச் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்க முடியும்?  உலகம் முழுவதும் தலாக் முறை பின்பற்றப்படவில்லை.

இந்த முறை பயங்கரமானது மற்றும் மோச மானது. எது பாவப்பட்ட செயலோ, அதை வழக்கமாக பின்பற்ற முடியாது. மத அடிப்படையில் மோசமானது, சட்டமாக ஏற்க முடியாது. ஒழுக்க ரீதியாக தவறான விஷயம், சட்டரீதியாக சரியாக இருக்க முடியாது’’ என்று அதிரடியான கருத்துக்களை கூறினர்.

அதையடுத்து தலாக் நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சாய்ரா பானுவின் வழக்கறிஞர் அமித் சிங் கூறுகையில்,

‘‘பாவம் நிறைந்த மற்றும் ஆணாதிக்க வழக்கம், இஸ்லாமின் அங்கமாக இருக்க முடியாது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கொள்கையை கை கழுவி விடக்கூடாது. மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். தலாக் மோசமானது என கூறும் முஸ்லிம் அமைப்புகள், இந்த நடைமுறை தொடர அனுமதிக்கிறது. தலாக் விரும்பத்தகாதது என கூறும் மத்திய அரசு அதை சட்டமாக்குவதில்லை’’ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் சட்டவாரிய வழக்கறிஞர் கபில்சிபல்,  ‘‘அரசு சட்டம் கொண்டு வர விரும்பினால் கொண்டு வரட்டும். ஆனால், நாங்கள் எந்த சட்டமும் வைத்துக் கொள்ளக் கூடாது, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது.

இது வழக்கத்தில் உள்ள நடைமுறை, 25வது சட்டபிரிவுப்படி இது அடிப்படை உரிமை என்கிறது, முஸ்லிம் சட்ட வாரியம். அதை நீதிமன்றம் எப்படி தள்ளி வைக்க முடியும்.

சமூகத்தில் பல விஷயங்கள் நடக்கிறன. அவற்றை எல்லாம் வழக்கத்தில் உள்ள நடைமுறைகள்தான் பாதுகாக்கின்றன. இந்த உலகில் எது பாவப்பட்ட செயல் என தீர்மானிப்பதற்காக இந்த நீதிமன்றம் இல்லை. நாம் சட்ட விதிமுறைகளை பற்றிதான் பேசுகிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் சில விதிமுறைகள் உள்ளன. அந்த நடைமுறையை பின்பற்றுங்கள்’’ என்று கூறினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள்  காங்கிரஸ் மத்திய அமைச்சரும், மூத்த வக்கீலுமான சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘குரானில் முத்தலாக் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது பாவச் செயல், முறையற்றது, ஆணாதிக்க செயல், முஸ்லிம் மதத்தில் மோசமானது, விரும்பத்தகாதது’’ என்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில்சிபல்தான் தலாக் சட்டத்திற்கு ஆதரவாக வாதாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்சியை இரு வக்கீல்களும், ஒரு முக்கியமான சமுதாய பிரச்னையில் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை எழுப்பி உள்ளது.