முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு!

Must read

டில்லி,

ஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தர விட்டுள்ளது.

 

இஸ்லாமியர்களிடையே, மனைவியை பிடிக்காவிட்டால் வாய்மொழியாக மூன்று தடவை தலாக் கூறிவிட்டால் அவர்களுக்குள் விவாகரத்து உறுதியாகிவிடும். இவ்வாறு மூன்று முறை தலாக் சொல்வதே முத்தலாக் என அழைக்கப்படுகிறது.

இந்த நடைமுறை இஸ்லாமியர்களிடையே  காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த முத்தலாக் முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முத்தலாக் முறையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பலர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு குறித்து,  பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

இதற்கு பதில் அளித்த, இஸ்லாமிய  சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது.

அதில்,  சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தர விட்டது.

மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், ஹாஜிக்கள் வழங்கும் முத்தலாக் சான்றிதழ் பரிந்துரையே தவிர அதற்கு எவ்விதமான சட்ட மதிப்பு கிடையாது என்றும், முத்தலாக் சான்றிதழ் வழங்க தடையும் விதித்திருக்கிறது.

அதேபோல், முத்தலாக்,  இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது! அலகாபாத் உயர் நீதிமன்றமும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article