திருப்பூர்
திருப்பூரில் மசூதிக்கு சொந்தமான 3 செண்ட் நிலத்தை கோவில் கட்ட இஸ்லாமியர்கள் தானம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர் இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதி உள்ளது. இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.
அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் மசூதிக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கியுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் தற்போது சாதி, மதம் என இன பாகுபாடுகள் மூலம் பலரும் பிரிந்து கிடக்கும் சூழலில் அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
தற்போது கோவில் கட்டும் பணி தற்போது நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகமும் நடைபெறும் நிலையில் முஸ்லிம்கள் மசூதியில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். முஸ்லிம்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கோவில் விழாவில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.