அரியானா

அரியானாவின் மேவாட் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கோசாலை நடத்தி பசுக்களை பராமரிப்பதுடன் கோவர்த்தன் பூஜையும் நடத்துகின்றனர்.

மேவாட் என்பது ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகியவை இணைத்த பகுதியாகும்.

இங்கு வசிக்கும் முஸ்லிம்களிடம் இந்துக்களின் பல பழக்கங்கள் உள்ளன.

முஸ்லிம்கள் பலரும் பசுக்களை பராமரித்து வருகின்றனர்.

மாடுகளை மாமிசத்துக்காக வெட்டுவதை அடியோடு வெறுக்கின்றனர்.

இவர்கள் தங்களை பாண்டவர்களின் அஸ்தினாபுரத்தில் இருந்தவர்களின் வம்சாவழியினர் என சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்களின் திருமணங்களில் மகாபாரதக் கதை பாடலாக பாடப்படுகின்றது.

திருமணம் முடிந்த பின் தங்களின் வீட்டில் உள்ள பசுவுக்கு மணப்பெண் பூஜை செய்து, அதன் சாணியில் வரட்டி தட்டி, அதைக் கொண்டு அடுப்பை முதலில் பற்ற வைக்க வேண்டும்.

இவர்களின் முக்கிய திருவிழா கோவர்த்தன் பூஜை எனப்படும் பசுவுக்கு செய்யப்படும் பூஜை.

இங்கு கோசாலைகள் என்னும் மாட்டுப்பண்ணைகள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளன.

ஒவ்வொரு கோசாலையிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன.

அவற்றை பராமரிப்பவர்கள் அனைவருமே முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் இங்குள்ள கோசாலையில் இருந்து மற்றொரு கோசாலைக்கு மாற்ற சில பசுக்களை கொண்டு சென்றபோது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து இந்த மக்கள், தாங்கள் பசுக்களின் காவலர்கள் என்றும், அரசியல்வாதிகள் சிலரின் தூண்டுதலால் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறினர்.

இஸ்லாமியக் கோட்பாட்டின் படி, எந்த ஒரு விலங்கையும் வணங்குவது தவறு.

ஆனால் இவர்கள், பசு தங்களுக்கு தாய் எனவும், தாயை வணங்குவது எந்த மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது அல்ல என சொல்கிறார்கள்.

விவசாயம் செய்யும் தங்களுக்கு மாடுகளைக் கொல்வது என்பது தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரையே கொல்வதற்கு சமம் என அங்குள்ள மக்கள் சொல்கின்றனர்.