லக்னோ
உத்திரப் பிரதேச மதரசாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்)க்கு இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்த யோகியின் உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமியப் பள்ளிகள் அனைத்தும் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கும், ஹோலி பண்டிகை அன்றும், அம்பேத்கார் பிறந்த நாள் அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு இயங்காது. ஆனால் பாஜக ஆட்சி உத்திரப் பிரதேசத்தில் வந்த பின்பு இஸ்லாமியப் பள்ளிகளும் மகாவீரர் பிறந்த நாள், புத்த பௌர்ணமி, ரக்ஷா பந்தன், மகாநவமி, தீபாவளி, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த உத்தரவு வெளியானது.
தற்போது மற்றொரு உத்தரவை யோகி ஆதித்யநாத் அரசு பிறப்பித்துள்ளது. அதன் படி மதரசாக்களுக்கு அளிக்கப்பட்ட இஸ்லாமியப் பண்டிகைகளுக்கான பத்து விடுமுறை நாட்கள் நான்காக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்லாமிய மக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலத்தில் உள்ள பல இஸ்லாமியத் தலைவர்களும் இதற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அரசு தரப்பில் மாநில மதரசா வாரியப் பதிவாளர் ராகுல் குப்தா, “அந்த 10 நாட்கள் விடுமுறைகளும் மதரசாக்கள் விருப்பப் பட்ட நாட்களில் அளிக்கும்படி முன்பு இருந்தது. தற்போது மாநிலத்தின் தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு அந்த விடுமுறைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நமது நாட்டின் தலைவர்களைப் பற்றி அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்” என தெரிவித்துள்ளார்.
மதரசா ஆசிரியர் சங்க தலைவர் எய்ஜாத் அகமது, “அரசின் இந்த உத்தரவால் இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தி உண்டாகி உள்ளது. மதரசாக்கள் என்பது மதப் பள்ளிகள் ஆகும். அவர்களுக்கான விடுமுறைகள் என்பது அந்த மதத்தின் பண்டிகைகளைப் பொறுத்தே அமைய வேண்டும். மற்ற மதப் பண்டிகைகளுக்கு மதரசாக்களுக்கு விடுமுறை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மதரசாக்களுக்கே உரித்தான 10 விடுமுறைகளை நான்காக குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” எனக் கூறி உள்ளார்.