மலப்புரம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழி பெயர்த்த மாணவிக்குக் கல்லூரியில் படிக்க முஸ்லிம் லீக் உதவ முன் வந்துள்ளது.
கடந்த ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அவர் மலப்புரம் அருகே உள்ள கருவாரக் குண்டு என்னும் ஊரில் அரசுப்பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தைத் திறந்து உரையாற்றிய போது தனது ஆங்கில உரையை மலையாளத்தில் யாராவது மொழி பெயர்க்க முடியுமா எனக் கேட்டார்.
அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த ஃபாத்திமா சஃபா செயின் என்னும் மாணவி முன் வந்து ராகுல் காந்தி உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். இது அப்போது மாணவிக்குப் பாராட்டை அளித்தது. அவரது திறமையைப் பலரும் பாராட்டினர். இது குறித்து சஃபா, தனக்கு ராகுல் காந்தி மிகவும் பிடித்தமான தலைவர் எனவும் அவருடன் ஒரே மேடையில் கலந்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஃபாத்திமா சஃபா செயின் தற்போது 12 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஏ பிளஸ் மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது கல்விச் செலவை முஸ்லிம் லீக் ஏற்றுக் கொள்ளும் என அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சஃபாவை தொடர்பு கொண்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடம் சஃபா தாம் ஃபரூக் கல்லூரியில் பி எஸ் சி கெமிஸ்டிரி படிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சஃபாவின் பட்டப்படிப்புக்கான அனைத்து உதவிகளையும் அளிக்க முஸ்லிம் லீக் சார்பில் நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். கேரள மக்கள் சபாவுக்குப் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர். பத்திரிகை.காம் தனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறது.