மும்பை

பிரிவினையின் போது இந்திய இஸ்லாமியர் இந்தியாவை தேர்ந்தெடுத்தனர், பாகிஸ்தானை அல்ல என இஸ்லாமிய தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரிப் பகுஜன் மகாசங்க் என்னும் அமைப்பு நேற்று பேரணி ஒன்றை நடத்தியது. பிரகாஷ் அம்பேத்கார் தலைமை ஏற்று நடத்திய அந்த பேரனியில் இஸ்லாமிய தலைவரும் அகில இந்திய மஜிலிஸ் ஈ இத்தெகாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ஓவைசி தனது உரையில், “காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதை உலகே அறியும். அப்படி இருக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சரியான ஆதாரத்தை கேட்கிறார். தயவு செய்து அவர் தனது அப்ப்பாவி முகமூடியை கழற்றி விட்டு பேசவும். அவர் இது போல இந்தியாவை தாக்கி பேட்டி அளிப்பது தவறானது.

இந்திய இஸ்லாமியர்களை குறித்து பாகிஸ்தான் கவலைப்பட தேவை இல்லை. ஏனெனில் கடந்த 1947 ஆம் வருட பிரிவினையின் போது இந்தியாவை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்திய கோவில்களில் அடிக்கும் மணி சத்தம் நிறுத்தப்படும் என கூறி உள்ளார். அவருக்கு இந்தியாவை பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன். இங்குள்ள இஸ்லாமியர்கள் உயிருடன் உள்ள வரை மசூதியின் பாங்கு ஓசையையும் கோவிலின் மணி ஓசையையும் நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த ஒற்றுமையைக் கண்டு பாகிஸ்தான் பொறாமை அடைந்துள்ளது. ஒரு சோதனை என வந்தால் எங்கள் ஒற்றுமையை யாராலும் வீழ்த்த முடியாது. பதான் கோட், உரியை தொடர்ந்து இப்போது உல்மாவில் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்கிறது. புல்வாமா தாக்குதலை,  பாகிஸ்தான் அரசு தனது  ராணுவம் மற்றும் உளவுத்துறையின் திட்டத்தின் மூலம் அரங்கேறி உள்ளது.

இத்தனை பேரை கொன்ற அந்த இயக்கம் ஜெய்ஷ் ஈ முகமது இல்லை. அது ஜெய்ஷ் ஈ சைத்தான். அப்பாவி மக்களை கொல்லும் இயக்கத்தின் பெயரில் முகமது இருக்கக் கூடாது. சைத்தான் தான் இருக்க வேண்டும் அந்த இயக்க தலைவர் மசூத் அசார் இனி அல்லாவின் பக்தர் என சொல்லிக் கொள்ளக் கூடாது. சைத்தானின் பக்தர் என சொல்லிக் கொள்ள வேண்டும்” என ஓவைசி கூறி உள்ளார்.