குர்கோன்: ஹரியானா மாநிலம் குர்கோனிலுள்ள தமஸ்பூர் கிராமத்தில், ஒரு முஸ்லீம் குடும்பத்தை, ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தோடு தாக்கிய கும்பல் ஒன்று, அவர்களின் வீட்டிலிருந்து விலையுயர்ந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்து குர்கோனில் வாழ்ந்து வருகிறது முகமது சஜீத் என்பவரின் குடும்பம். அவரது பிள்ளைகளும், அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவுப் பிள்ளைகளும் வீட்டின் அருகேயிருந்த காலியிடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோதுதான், அங்கே வந்த சிலர், ‘பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுங்கள்’ என்று கூறி பிரச்சினை செய்யத் தொடங்கினர்.

பின்னர், அவர்கள் 20 முதல் 25 பேர் அடங்கிய கும்பலாகத் திரண்டு, ஆயுதங்களைக் கொண்டு, வீட்டிற்குள் புகுந்து தாக்கத் தொடங்கினர்.

முடிவில், அந்தக் குடும்பத்தினருடைய காரை சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்த சில விலையுயர்ந்த பொருட்கள், நகைகள் மற்றும் பணம் முதலியவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினர்.

ஹோலிப் பண்டிகையன்று மாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்தக் கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

– மதுரை மாயாண்டி