சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு வரும் ஜுன் 2-ம் தேதி பாராட்டு விழா நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளையராஜா உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ‘ராயல் பிலார்மோனிக்’ ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து கடந்த 9 ஆம் தேதி (2025, மார்ச் 9ந்தேதி) லண்டனில் தனது முதல் சிம்பொனி ‘valiant’ இசையை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த ‘முதல் இந்தியர்’ என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது சிம்பொனி இசைக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா சிம்போனி இசை நிகழ்ச்சி மற்றும் 50 ஆண்டு கால திரையிசை பயணத்தை பாராட்டும் விதமாக ஜுன் 2-ம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை அமர்வில், தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனி இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும்” என்று அறிவித்தார்.