சென்னை: இசைஞானி இளையராஜா தமது பொருட்களை எடுக்க, நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976ம் ஆண்டு முதல் தமது படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந் நிலையில், பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள, தானே எழுதிய இசை கோர்ப்புகள், தமக்கு சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தியானம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, இசையமைப்பாளர் இளையராஜாவை சில நிபந்தனைகளுடன் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பு தெரிவித்தது. இதனை வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்தார்.
ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும், அங்குள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் கோரினார். அதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.
இந் நிலையில், நாளை காலை 9 மணிக்கு இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார். தியானம் செய்யவும், உடைமைகளை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் நாளை அவர் ஸ்டுடியோவுக்கு செல்கிறார்.