கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீப ஆண்டுகளாக, திரைத்துறை, சமூக வலைதள பிரபலங்கள், யூடியூபர்கள், டிக் டாக் பிரபலங்கள் என பலரும் தங்களை மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இசை வெளியீட்டு விழா தொடங்கி படத்தின் அறிமுக விழா என திரைத்துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமன்றி ஒரு சில தனியார் பல்கலைக்கழக வளாகங்களில் சினிமா படப்பிடிப்புக்கு என்றே பிரத்யேகமாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்படுகிறது.
தவிர, இங்கு வரும் நட்சத்திரங்கள் மாணவர்களிடையே தோன்றி தங்கள் ப்ரோமோ நிகழ்ச்சிக்கும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதோடு புத்தாண்டு மற்றும் தங்கள் கல்லூரி கலைவிழாக்களில் தங்கள் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு பதிலாக நட்சத்திரங்களை முன்னிலைப் படுத்தி கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
இந்த நிலையில், ‘மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்’ என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.