சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research செண்டர் தொடங்க ஐஐடி மெட்ராஸ் மற்றும் இசைஞானி இளையராஜா இடையே புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் இந்திர சேனா ரெட்டி மற்றும் ஐஐடி- சென்னை இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இளையராஜா “கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ, அப்படியேதான் இன்றும் இருக்கிறேன். இசை கத்துக்க சென்னைக்கு வந்தவன், இதுநாள் வரைக்கும் கத்துக்கல.. அதுதான் நான். மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது” என்றார்.
முன்னதாக இந்த நிகழ்வின் அறிமுக கூட்டத்தின் போது பேசிய ஐஐடி இயக்குநர் காமகோட்டி, “இந்தியக் கலாச்சார இசையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நாட்டில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் எடுத்துச் சென்றவர் இசைஞானி இளையராஜா.. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது” என்றார்.
இந்த இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் 200 இளையராஜாக்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று 80 வயதான இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.