லாகூர்: பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை எதிர்த்து, லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப்.
கடந்த 2001ம் ஆண்டு பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவ தளபதியாக இருந்த முஷரப், 2008ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபர் பதவியில் தொடர்ந்தார்.
அவர், கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். எனவே, இதற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டில் அவர்மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.
நாட்டிற்கு எதிராக சதி செய்தல், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால், தற்போது துபாயில் வசித்துவரும் முஷரப் சார்பில், இத்தீர்ப்பை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும், அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை ரத்துசெய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி மசாஹிர் அலி அக்பர் நக்வி தலைமையிலான டிவிஷன் பென்ஞ்ச் விசாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.