திருத்தணி: மாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.ப
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya Swamy Temple, Tiruttani) என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா மார்ச் 3-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக மலைக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி, தினசரி இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து, முருகனை தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருக பெருமான் வள்ளி தாயாரை கடத்திச் சென்று, திருத்தணி மலைமீது வைத்து திருமணம் செய்து கொண்டதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில், குதிரை வாகனத்தில் புறப்பட்ட முருக பெருமான், வள்ளி தயாருடன் கோயிலில் உள்ள வள்ளி மண்டபம் சென்றடைந்தார். பின்னர் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.