மதுரை:  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி எம்பிஏ பட்டதாரியான முருக பக்தர் பூரணசந்திரன் என்பவர்  தீக்குளித்தார்.  அவர் தீக்குளிப்பதற்கு முன்பு, அதற்கான காரணம் கூறி ஆடியோ வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த  தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த திமுக அரசு மறுத்து வழக்குகளை தொடுத்து இழுத்தடித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண்  வலியுறுத்தி, மதுரையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான  முருக பக்தர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பூர்ண சந்திரன் (40). எம்பிஏ பட்டதாரியான இவர், தீவிர முருக பக்தர். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் (MEDICAL REP) அவ்வபோது சிறிய சரக்கு வாகனம் மூலமாக பழங்கள் விற்பனை செய்தும் வந்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தீபம் ஏற்ற அரசு தடை விதித்த விவகாரத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   பூர்ண சந்திரன் நேற்று  பிற்பகல் (டிச.18) மதுரை அவுட்போஸ்ட் பெரியார் சிலை அருகே தனது சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள போலீஸ் பூத்திற்குள் சென்றார். பின்னர் கதவை பூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, பூர்ண சந்திரனின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனே தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புதுறையினர் பூர்ண சந்திரனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்டமாக தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையில், பூர்ண சந்திரன் தற்கொலைக்கு முன்பு அவரது செல்போனில் ஆடியோ பதிவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதில், ” திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும் அது ஏற்றவில்லை. இதனால் நான் உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன்.

திருப்பரங்குன்றம் மலையில் தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்தேன், ஆனால் கோயிலுக்கு களங்கம் வந்துவிடக்கூடாது. ஆகையால், கடவுளே இல்லை என்று சொன்ன பெரியார் சிலை முன்பு கடவுளுக்காக எனதுயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், தல்லாகுளம் காவல்துறையினர் பூர்ண சந்திரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு மகன், மகள், மனைவி என உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]