சென்னை: திருமாவளவனுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறை தூங்குகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லைக் கண்ணனை கைதுசெய்து சிறையில் அடைத்த காவல்துறை தற்போது நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கி இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, இந்து அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு ஒரு நீதியா? என்று கொந்தளித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து, அவரை தடாலடியாக கைது செய்து சேலம் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், ஒரு கட்சித்தலைவரை கொலை செய்வேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் இந்து மக்கள் கட்சித் தலைவர் மீது காவல்துறை இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி இந்து பெண்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. திருமாவளவனின் பேச்சுக்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘‘2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதி பற்றி சமஸ்கிருதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் எந்தளவுக்கு உண்மை என்பதுரு தெரியாத பட்சத்தில், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பாஜக உள்பட இந்து அமைப்புகள், திருமாவளவனின் பேச்சுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகட்சியினரும போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் பாஜகவின் வேல் யாத்திரை மேலும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில், திருமாளவனின் பேச்சுக்கு எதிராக அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர்.. சென்னை நங்கநல்லூரில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வன்முறை பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்தவீடியோவில், “திருமாவளவனுக்கு என்ன 7 கொம்பா முளைச்சிருக்கு? நீ எந்த சாதியா இருந்தால் என்ன? நீ இந்துவே இல்லை.. நான் கிறிஸ்டியன்னு நீ பேட்டி தர்றே.. எந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் நின்னு நீ ஜெயிக்க முடியும்? துணிச்சல் இருந்தால், நீ ஆம்பிளையா இருந்தால், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வா பார்க்கலாம்..
2 ஆயிரம் ஓட்டுலதானே ஜெயிச்சிருக்கே.. ஒரு வார்டு கவுன்சிலரே 9 ஆயிரம் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறான்.. பூராம் இந்துக்கள் ஓட்டு.. சிதம்பரம் தீட்சிதர் 28 ஆயிரம் பேர் ஓட்டு போட்டிருக்கான்.. ஓட்டு மட்டும் பாப்பான் ஓட்டு இனிக்குதோ? இப்போ மனு தர்மம்? யார் மனு? திருமாவளவன் மீது கேஸ் தந்தேன்.. யாருமே கைது பண்ணல.. ஆனால் முருகனை மட்டும் கைது பண்றீங்களே?” என்று விமர்சித்ததுடன், திருமாவளவனை போட்டுட்டுதான் ஒதுங்குவோமே தவிர.. பார்த்துட்டு ஒதுங்கமாட்டோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறை வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபரான ஸ்ரீதரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. கடந்தஜனவரி மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த பேச்சாளரும், தமிழ் இலக்கியவாதியும் நெல்லை கண்ணன் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் புகார் கொடுத்தனர். இதையடுதது, நெல்லை கண்ணன் மீது 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது.
ஆனால் தற்போது, அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் பகிரங்கமாக மிரட்டல் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், அவரை கைது செய்யாமல் வழக்கு மட்டும் பதிவு செய்து தமிழக காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.
நெல்லைக் கண்ணனுக்கு ஒரு நீதி, ஸ்ரீதருக்கு ஒரு நீதியா?