சென்னை:
மிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை இன்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ”இந்த சம்பவம் நடந்ததும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு ஆறுதல் கூறி எல்லா விதமான உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
அதேபோல் அவருக்கு ஐந்து லட்ச ரூபாய் உடனடியாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கியிருக்கிறார்கள். அதற்காகவும் காவல்துறை சார்பாக முதல்வருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரொம்ப திறமையாக, குடிபோதையில் ஆக்ரோஷமாக இருந்த குற்றவாளியை உடனடியாக மடக்கிப் பிடித்த மகளிர் காவலர் லட்சுமி, ரமேஷ், மணிகண்டன் மூன்று பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் ரொக்கப் பரிசும் கொடுக்கிறோம். வழக்கு பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக ஒரு மாதம் கழித்து திட்டமிட்டு இந்த மாதிரி கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

ஏன் இப்படி செய்தார் என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. போதையில் செய்திருக்கலாம் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இப்படி செய்திருக்கலாம் அதுபற்றி எல்லாம் விசாரித்து வருகிறோம். பெண் காவல் அதிகாரி கடமையைத்தான் செய்திருக்கிறார்.

அப்பொழுதும் கூட கடமையை செய்தவரை கூட ஒரு மாதம் கழித்து தாக்குவது என்பது எப்படி என புரியவில்லை. தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் கடந்த ஒரு வருடமாக குறைந்துள்ளது. அதுவும் தென்மாவட்டங்களில் பழிக்குப்பழி கொலைகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த 8 மாதங்களாக அது போன்ற சம்பவங்களே இல்லை” என்றார்.