மும்பை,

மும்பையில் இன்று 10 மாநகராட்சிகளுக்கான  தேர்தல் நடைபெற்று வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தல் களத்தில் 10 மாநகராட்சிகளிலும் உள்ள 1,268 வார்டுகளில் மொத்தம் 9,199 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மும்பை மாநகராட்சியில்  மட்டும் 2 ஆயிரத்து 271 பேர் போட்டியிடுகிறார்கள்.

கடந்த   2012-ம் ஆண்டு தேர்தலின்போது பாரதீய ஜனதா சிவசேனா  கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் பாரதியஜனதாவும், சிவசேனாவும் தனித்தே போட்டியிடுகிறது. பா.ஜ.க முதல்வர் தேவந்திர பட்நாவிசுக்கம், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தேர்தலில் பிரசாரத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன.  இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை மாநகராட்சி தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் 32 இடங்களை மட்டும் கூட்டணிகளுக்கு விட்டு கொடுத்துவிட்டு,  195 இடங்களில் பாரதீய ஜனதா போட்டியிடுகிறது.

கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவுபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற தேர்தலை போல பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மும்பை மாநகராட்சி  227 வார்டுகளை கொண்டுள்ளது.  ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக 50 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். வாக்காளர்கள்  வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தம் 7 ஆயிரத்து 304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இதில், பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

இன்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5.30 மணி வரை வாக்குகளை பதிவு செய்யலாம்.

தேர்தல் முடிவுகள்  வரும் 23–ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 20ஆயிரத்து 982 போலீசாரும் , 2 ஆயிரத்து 375 போலீஸ் அதிகாரிகளும், ஊர்காவல் படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் மாநில அதிரடிப்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பங்கு சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.