மூணாறு நிலச்சரிவு: உயிரிழந்தோர்  எண்ணிக்கை 48 ஆக உயர்வு…

Must read

இடுக்கி: மூணாறு  அருகே ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த  சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. கனத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வந்த தமிழர்கள் வசித்து வந்த ராஜமலை பகுதியில் உள்ள குடியிருப்பு  பகுதியில் நள்ளிரவு பலத்த மழை காரணமாக  நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், அங்குள்ள வீடுகளோடு, அதனுள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் கடந்த 4 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் நாளில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட  நிலையில், பின்னர் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்த நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டன. நேற்று வரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று   மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக  உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் பெரும்பாலனோர்  தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

More articles

Latest article