கடையநல்லூர்: தண்ணீர் பிரச்சினைனை சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற முயன்ற ஒரு நபரை, அரசு அதிகாரி ஒருவர் கடுமையான எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி, அந்த அதிகாரிக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியிலிருந்து வந்த நபர் ஒருவர் தன் பகுதியில் தண்ணீரே வரவில்லை என்று புகார் கூறியதுடன், அங்கு பணி செய்துகொண்டிருந்த ஊழியர்கள் மத்தியில் சாதி மற்றும் மதம் குறித்தும் பேசினார்.

இதனைக் கண்டு கொந்தளிப்படைந்த கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், “உங்களுக்கு உண்மையிலேயே தண்ணீர் பிரச்சினை என்றால் அதை மட்டுமே கூறுங்கள். அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். அதைவிடுத்து சாதி மற்றும் மதம் குறித்துப் பேசுவது எதற்காக?

இது ஒரு அரசு அலுவலகம். இங்கே அனைத்து தரப்பினரும் உண்டு. இங்கே சாதி மற்றும் மத அரசியலுக்கெல்லாம் இடம் கிடையாது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் அந்த சாதி, இந்த சாதி என்றெல்லாம் பேசக்கூடாது. எனவே, உங்களின் சேட்டையை இங்கே வைத்துக்கொள்ள வேண்டாம். இது அரசு அலுவலகம்; உங்கள் அப்பா வீட்டு அலுவலகம் அல்ல” என கடுமையாக எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

சாதிப் பிரச்சினையை எழுப்பிய நபர் கழுத்தில் காவித் துண்டு அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனருக்கு பலதரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.