புதுடெல்லி: சென்னைக்கு எதிரானப் போட்டியை, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை. பொல்லார்டு தனிமனிதனாக நின்று, தனது அணியை வெற்றிபெற செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 218 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் 3 பேட்ஸ்மென்கள் அதிரடி அரைசதம் அடித்தனர்.
பின்னர், சவாலான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், பொல்லார்டு களமிறங்கியதும் நிலைமை அப்படியே மாறியது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர் ஆடத்தொடங்கினார்.
டி காக் 38 ரன்களும், ரோகித் 35 ரன்களும், கருணால் பாண்ட்யா 32 ரன்களும், ஹர்திக் 16 ரன்களும் அடித்து அவுட்டானார்கள். கடைசி வரை களத்தில் நின்ற பொல்லார்டு, 34 பந்துகளை சந்தித்து, 8 பவுண்டரிகள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்களை அடித்து தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
சென்னை அணியின் பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி, தனது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். 4 ஓவர்கள் வீசிய அவர், 1 விக்கெட்கூட எடுக்காமல் 62 ரன்களை வாரி வழங்கினார்.
ஒரு ஓவர் மட்டுமே வீசி, 1 ரன் மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டையும் எடுத்த மொயின் அலிக்கு, தோனி மேலும் ஓவர்களே கொடுக்காததும், மோசமாக வீசிக் கொண்டிருந்த லுங்கிக்கு முழு ஓவர்களையும் கொடுத்ததும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.