துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியை 9 விக்கெட்டுகளில் எளிதாக வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது மும்பை அணி. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது மும்பை அணி. இதன்படி களமிறங்கிய டெல்லி அணியில், கேப்டன் ஷ்ரேயாஸ் 29 பந்துகளில் அடித்த 25 ரன்கள்தான் அதிகபட்சம்.
அந்த அணியின் அஸ்வின் 9 பந்துகளில் அடித்த 12 ரன்கள்தான் சிறந்த பெர்பார்மன்ஸ். மற்ற வீரர்கள் அனைவரும் டெஸ்ட் மேட்ச் ஆடினார்கள். அதாவது, அவர்கள் சந்தித்த பந்துகளைவிட ரன்கள் குறைவு.
இரண்டு போட்டிகள் தொடர்ந்து சதம் விளாசிய ஷிகர் தவான், தற்போது தொடர்ந்து 3 போட்டிகளாக சொதப்பி வருகிறார். இன்றையப் போட்டியில் அவர் டக்அவுட். மொத்தத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி.
மும்பை அணி சார்பில், பும்ரா மற்றும் பெளல்ட் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 4 ஓவர்கள் வீசிய பும்ரா கொடுத்த ரன்கள் 17 மட்டுமே.
மொத்த பந்துகளைவிட 10 ரன்களை குறைவாக எடுத்தால்போதும் என்ற ஒரு இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, எந்த தடுமாற்றமும் அடையவில்லை. அந்த அணியின் துவக்க வீரர் இஷான் கான் ஏதோ 200 ரன்கள் டார்க்கெட்டை விரட்டுவதுபோல் ஆடினார்.
47 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 72 ரன்களைக் குவித்தார். குவின்டன் டி காக் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களும் அடிக்க, 14.2 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 111 ரன்களை எடுத்து வென்றது மும்பை அணி.
ஆரம்பத்தில் எழுச்சி காட்டிய டெல்லி அணி, மொத்தமாக 6வது தோல்வியை சந்தித்துள்ளது.