மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த கூடையில் எலி குட்டிகள் இருப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்து ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோவில் அறக்கட்டளை (SSGT) தலைவர் சதா சர்வாங்கர் கூறுகையில், “அந்த வீடியோவில் இருப்பது சித்திவிநாயகர் கோயில் இல்லை” என்றும் “இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நாட்டின் பிற முக்கிய கோயில் பிரசாதங்களில் கலப்படம் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் பிரசாதம் வைக்கப்பட்டிருந்த கூடையில் பிரசாத பொட்டலங்களுடன் எலி குட்டிகள் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, அக்கோயிலின் அறக்கட்டளை தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சித்திவிநாயகர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான லட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் அவை தயாரிக்கப்படும் இடம் சுத்தமாக உள்ளது. ஆனால் வீடியோவில் ஒரு அசுத்தமான இடம் இடம்பெற்றுள்ளது. அது கோயில் வளாகம் இல்லை” என்றும் “இந்த வீடியோ வெளியில் எங்கோ எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிசிடிவியை சரிபார்த்து, விசாரணை நடத்த டிசிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி நியமிக்கப்படுவார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தவிர, நெய், முந்திரி மற்றும் இதர பொருட்கள் முதலில் பிரஹன்மும்பை மாநகராட்சி ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு, உணவு தர ஒப்புதலுக்குப் பிறகே பயன்படுத்தப்படுகின்றன என்றும் விளக்கினார்.

திருப்பதி லட்டு சர்ச்சையை அடுத்து நாடு முழுவதும் நெய் பொங்கல், நெய் ரோஸ்ட் உள்ளிட்ட உணவுவகைகளை பரிமாறும் உணவகங்கள் முதற்கொண்டு அனைத்து இடத்திலும் உணவு தர சோதனைகளை FSSAI அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் திங்களன்று மதுரா, விருந்தாவன் போன்ற கோயில் நகரங்களில் உள்ள 15 விற்பனையாளர்களிடமிருந்து பேடா உள்ளிட்ட 43 வகை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.