மும்பை:

மும்பை டூ புனே இரண்டு மணி நேரத்தில் செல்லும் வகையில், அதிவிரைவு ரயில் திட்டத்தை கொண்டுவர ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரயில்வே பாதைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம்  தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு மத்தியஅரசு பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அதிவிரைவு ரெயில் திட்டம் குறித்து ஒப்பந்தம் போட்டது. இந்த அதிவிரைவு ரயில் திட்டத்திற்காக ரயில்வே ரயில் பாதைகள் மேம்படுத்துதல் உள்பட பணிகளுக்காக  மொத்த செலவு 11,000 கோடி ரூபாய்  தேவை என கூறப்பட்டது.

அதன்படி, டெல்லி-கான்புர், மும்பை புனே,  சென்னை-ஹைதராபாத், சென்னை- மைசூர்,உள்ளிட்ட ஏழு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய செமி ஹை ஸ்பீடு திட்டத்தின் கீழ் மாதிரிக்காக டெல்லி-சண்டிகர் ரயில் வழித்தடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதலகட்டமாக மும்பை லக்னோ இடையே சோதனை முறையில் விரைவு ரயில் போக்குவரத்து நடைபெற்றது. மேலும், மும்பை – நாசிக், மும்பை – வதோராவுக்கும் இந்த செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், மும்பை புனேவுக்கும் இடையே உள்ள 192 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரங்களில் கடந்துவிட முடியும். தற்போது,மூனே கால் மணி நேரம் ஆகும் நிலையில் சுமார் ஒன்னேகால் மணி நேரம் குறையும் என நம்பப்படுகிறது.

அதுபோல மும்பை  நாசிக் இடையே உள்ள 188 கிலோ மீட்டர் தூரம் கடக்க தற்போது 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும் நிலையில், அதுவும் 2 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என்றும், மும்பை வதோரா இடையே உள்ள 393 கிலோ மீட்டர் தூரம் சுமார் 4 மணி நேரத்திற்குள் கடந்து விடலாம் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த திட்டத்துக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. போக்குவரத்துக்கு ஆகும் நேரம் சுமார் 40 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.