ன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரானா அதிரடியாக விளையாடி 45 ரன் விளாசினார்.

வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் அணியில் ஹென்ரிக்சுக்கு பதிலாக முஸ்டாபிசுர் ரகுமான், பிபுல் ஷர்மாவுக்கு பதிலாக புதுமுக வீரர் விஜய் ஷங்கர் இடம் பெற்றனர்.

தொடக்க வீரர்களாக தவான், வார்னர் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 81 ரன் சேர்த்தனர். வார்னர் 49 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்பஜன் சுழலில் பார்திவ் வசம் பிடிபட்டார்.

ஐபிஎல் தொடரில் அவர் 3வது முறையாக ஹர்பஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து தவானுடன் தீபக் ஹூடா இணைந்தார்.ஹூடா 9 ரன் மட்டுமே எடுத்து ஹர்பஜன் சுழலில் போலார்டு வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து தவானுடன் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் 48 ரன் எடுத்து (43 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) மெக்லநாகன் பந்துவீச்சில் ஸடம்புகள் சிதற கிளீன் போல்டானார்.அடுத்து வந்த யுவராஜ் சிங் 5, பென் கட்டிங் 20, விஜய் ஷங்கர் 1, நமன் ஓஜா 9, ரஷித் கான் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. புவனேஷ்வர் 4, நெஹ்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பூம்ரா 3, ஹர்பஜன் 2, மெக்லநாகன், ஹர்திக், மலிங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. அந்த அணி 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து வென்றது. ரானா அதிகபட்சமாக 45 ரன் விளாசினார். பார்த்திவ் படேல் 39, பட்லா 14, ரோகித் சர்மா 4, பொல்லார்டு 11, குர்னல் பாண்டியா 37 ரன் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 2, ஹர்பஜன் சிங் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3, நெஹ்ரா 1, ரஷீத், ஹூடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பூம்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.