மும்பை

கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது.  இந்த பரவுதலைத் தடுக்க அரசு பல முயற்சிகள் செய்தும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்துக்கு வந்துள்ளது.  இதனால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.  இந்த தாக்குதலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் மும்பை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர்கள் அமித் அகர்வால் மற்றும் ரஜனீஷ் பரத்வாஜ் இருவரும் இணைந்து கொரோனா பரவுதல் குறித்த ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.  இந்த ஆய்வில் கோடைக் காலங்களில் கொரோனா பரவுதல் குறைவாக இருக்கும் எனவும் மழைக்காலங்களில் கொரோனா பரவுதல் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் அமித் அகர்வால், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதர் தும்மும் போது மற்றும் இருமும் போஒது இந்த வைரஸ் பரவுகிறது.  ஒவ்வொரு முறை இருமும் அல்லது தும்மும் போது வரும் துளிகளில் இந்த வைரஸ் வெளியாகிறது.   இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் நேரத்தைப் பொறுத்து வேகமாகப் பரவக் கூடும்.

வெப்பம் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியாகும் துளிகள் விரைவில் காய்ந்து விடும்.  இதனால் துளிகளில் உள்ள வைரஸ் விரைவில் இறந்து விடும்.  ஆனால் மழைக்காலங்களில் வெப்ப நிலை மிகக் குறைவாக உள்ளதால் துளிகள் காய அதிக நேரமாவதோடு வைரஸ் அதிக நேரம் உயிருடன் இருப்பதால் பரவுதல் மிகவும் தீவிரமாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை பருவ காலத்துக்கும் கொரோனா பரவுதலுக்கும் தொடர்பு உள்ளதாக எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  ஏற்கனவே எய்ம்ஸ் மற்றும் ஐ சி எம் ஆர் ஆகியவை பருவ காலங்களுக்கும் கொரோனா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறி உள்ளது.

இந்த ஆய்வு முடிவு சரி என்றால் இனி இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பை நகரில்  கடும் மழை பெய்யும் என்பதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.