டில்லி

கிருஷ்ண ஜெயந்தி அன்று நிகழும் உறியடி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்வோரின் வயது, மற்றும் உறியின் உயரம் ஆகியவை பற்றி உச்சநீதிமன்றம் விதித்த விதிகளை மாற்றியமைக்கும் மனுவை மும்பை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் நடத்தப்படும் உறியடி போன்ற நிகழ்வு மகாராஷ்டிராவில் தஹி – ஹண்டி என்னும் பெயரில் பிரம்மாண்டமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.  இதில் பலர் ஒருவர் மேல் ஒருவர் ஏறி மனித கோபுரமாக்கி உயரத்தில் உள்ள உறியை அடிப்பார்கள்.  இதில் பல விதிமுறைகளை ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

அதன்படி 18 வயதுக்கு உட்பட்டோர் இந்த மனித கோபுரத்தில் கலந்துக் கொள்ளக்கூடாது.  உறியின் உயரம் குறைக்கப்படவேண்டும்.  ஏனெனில் உறி அதிக உயரத்தில் வைக்கப்பட்டால் அதை அடிக்க முற்படும் வீரர்களும் அதிக உயரத்தில் மனித கோபுரம் அமைப்பார்கள்.  மனித கோபுரத்தின் உயரம் 20 அடியை தாண்டக்கூடாது.  இது போல பல விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வர உத்தரவிட்டது.

இதை மறுத்து மகாராஷ்டிர அரசு உச்சநீதி மன்றத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.  மனுவில் தேவையான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுவதால், விதிமுறைகளை தளர்த்தி உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டது.

மும்பையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இதை எதிர்த்து மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  அந்த மனுவில் இது மத திருவிழா என்பதை விட ஒரு சாகசத் திருவிழாவாகவே இளைஞர்கள் மனதில் உள்ளது.  கின்னஸ் புத்தகத்தில் 43.79 அடி மனித கோபுரம் அமைத்தது இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அந்த மனு தற்போது இளைஞர்கள் அந்த சாதனையை முறியடிக்கத்தான் முயல்வார்கள் எனவும் குறிப்பிட்டது.

உச்சநீதி மன்றமும் அந்த மனுவை ஏற்று, விதிமுறைகளை தளர்த்த மறுத்து விட்டது.  மேலும் மனித கோபுரம் அமைக்கும் போது இளைஞர்கள் கீழே விழுந்தால் முதுகுத்தண்டில் அடிபட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

மேலும் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்படி மும்பை உயர்நீதிமன்றத்துக்கு இந்த மனுவை உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது.  மும்பை உயர்நீதி மன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது