மும்பை

ட்டிசம் என்னும் மூளைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனை தற்போதுள்ள பள்ளியில் இருந்து நீக்கி வேறு பள்ளியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.

ஆட்டிசம் என்பது பிறவியிலேயே வரும் ஒருவகை மூளைவளர்ச்சிக் குறைபாடு ஆகும்.    இதை நோய் எனக்கூறாமல் குறைபாடு என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும்,  அபரிமிதமான பிடிவாதம்,  வயதுக்கேற்றபடி பேசாமை,   யாருடனும் ஒட்டாமல் இருப்பது போன்றவைகளுடன் காணப்படுவார்கள்.      மற்றபடி எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள்.   சில வேளைகளில் யார் எது சொன்னாலும் கேட்காமல் தங்கள் போக்குப்படி நடந்துக் கொள்வார்கள்.

மும்பையில் மேற்கு பாந்திரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இந்த பாதிப்பு உள்ள ஒரு மாணவர் படித்து வருகிறார்.   16 வயதான அவர் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.   பள்ளி நிர்வாகம் அவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தகுதி அற்றவர் எனக் கூறி பள்ளியில் இருந்து நீங்கிச் செல்லுமாறு அவரின் பெற்றோர்களிடம் கூறி உள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் அந்த மாணவர் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க உத்தரவிடுமாறு மும்பை உயர்நிதிமன்றத்திடம் மனு அளித்தனர்.   அந்த மனுவில், “எங்கள் மகனுக்கு புரிதலில் எந்த ஒரு இடையூறும் இல்லை.   ஆனால் சிறிது தாமதமாக எதையும் செய்வார்.   அவருக்கு அதிக நேரம் கொடுத்தால் அவரால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இயலும்.

மேலும் ஒன்றாம் வகுப்பில் இருந்து இதே பள்ளியில் படித்து வருகிறார்.   இந்த வருடத்துக்கான முழு கட்டணமும் நாங்கள் ஏற்கனவே செலுத்தி உள்ளோம்.  அப்படி இருந்தும் அவரை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதக் கூடாது எனவும்,  அவரை பள்ளியில் இருந்து நீக்கி வேறு பள்ளியில் சேர்க்குமாறும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது.

இனி அவரை வேறு பள்ளிக்கு மாற்றினால் இந்த வருடப் படிப்பு அவருக்கு பாழாகி விடும்.   எனவே இதே பள்ளியில் அவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்”  எனக் கோரப்பட்டிருந்தது.

அதற்கு பள்ளி நிர்வாகம், “அந்த மாணவருக்கு எழுத நன்றாக வருகிறது.   எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவார்.    ஆனால் அவர் எழுதுவது அர்த்தமற்று உள்ளது.   தவிர அவருடைய புரிதல் மிகவும் மெதுவாக உள்ளது.   ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ள அளவுக்கு தான் அவருக்கு புரிதல் தன்மை உள்ளது”  என பதில் அளித்தது.

மும்பை உயர்நீதிமன்றம், “அந்த மாணவரை பரிசோதித்ததில் அவரால் வழக்கமான பள்ளிகளில் கல்வி கற்க இயலாதவராக உள்ளார்.   எனவே இது போன்ற மாணவர்களுக்கு என உள்ள விசேஷ பள்ளியில் அவரது கல்வியை தொடர வேண்டும்.   மேலும் தற்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தயாரான நிலையில் இல்லை.    அவர் தயாரான பிறகு தேர்வு எழுதட்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் இதே பள்ளியில் கல்வியை தொடர்வது அந்தப் பள்ளிக்கு,  மாணவருக்கு மற்றும் அவர் பெற்றோர்களுக்கு என மூன்று தரப்பினருக்குமே எதிர்வினையை உண்டாக்கும்.  பள்ளி நிர்வாகம் உடனடியாக இது போன்ற குழந்தைகளுக்கான விசேஷ பள்ளிகளைக் கண்டறிந்து அந்தப் பள்ளியில் இந்த மாணவரை சேர்க்க பெற்றோருக்கு உதவ வேண்டும்”  என உத்தரவிட்டுள்ளது.