மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன்.
நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது.

’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் மட்டும் மாடுங்காவில் வாழ்ந்து வந்தார்.
குஜராத்தில் கள்ளநோட்டு தொடர்பான வழக்கு ஒன்றில் மட்டும் சிக்கிய மோகன் பாய் பின்னர் தனது தந்தையின் வழியைக் கைவிட்டு தனிப் பாதை ஏற்படுத்திக் கொண்டார்.
இருந்தபோதும் கணபதி விழாவை மட்டும் நடத்தத் தவறாத மோகன் பாய் அங்குள்ள தமிழ்ச் சங்கத்திலும் முக்கியப் பொறுப்பிலிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தியன்று மோகன் காலமானார்.
வரதராஜ முதலியாரின் வாரிசுகளில் மும்பையில் வசித்து வந்த மகன் மரணமடைந்தது அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.