மும்பை:
மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையிலும் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் ‘மால்’ உள்ளது. நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு அந்த மால் பகுதியில் திடீரென தீ பற்றிக் கொண்டது. அது மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது.
மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. தீ பரவியதும் அந்த கருவிகளில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் பந்தூப் பகுதிக்கு விரைந்தன. சுமார் 22 தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மும்பையில் உள்ள வேறு இரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]