மும்பை
பாகுபலி திரைப்படத்தில் அருவியில் பிரபாஸ் எகிறிக் குதிப்பது போல் தானும் குதித்த மும்பைய சேர்ந்த பிசினெஸ்மேன் ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
பாகுபலி தி பிகினிங் என்னும் பன்மொழித் திரைப்படத்தின் கதாநாயகன், மலை உச்சியை அடைய அருவியில் தாவிக் குதித்து மேலே செல்வான். அந்தக் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். படத்தில் அவர் அப்படிக் குதித்துச் செல்வது பலருடைய மனதைக் கவர்ந்தது.
ஆனால் மும்பையை சேர்ந்த இந்திரபால் பாடில் என்பவர் இதை ரசித்ததுடன், தானும் சிவு (பாகுபலியில் பிரபாஸ் பெயர்) போல் ஆக வேண்டும் என்னும் ஆர்வத்தில் இருந்திருக்கிறார். இவர் மும்பையை சேர்ந்த ஒரு பிசினெஸ்மேன். இவர் ஷாஹுப்பூரில் உள்ள மாஹுலி போர்ட்டில் உள்ள அருவியில் தாவிக் குதித்து மரக்கிளையை பிடிக்க முயற்சி செய்துள்ளார். திரைப்படத்தில் பிரபாஸ் கிளையை தவர விட்டாலும் கீழே விழுந்து மீண்டும் முயல்வார். ஆனால் நிஜத்தில் இந்திரபால் கிழே விழுந்து மரணம் அடைந்தார்.
போலீசார் இந்தப் பகுதியில் தற்போது இது போல சாகசங்கள் புரிய ஆசைப்பட்டு உயிர் இழப்பது அடிக்கடி நிகழ்வதாக கூறுகின்றனர். இது போல இன்னும் பல பாகுபலிகள் வரும் முன்பு இந்த இடத்தை யாரும் வரமுடியாமல் அடைக்க வேண்டும் என சில போலிசார் கூறுகின்றனர். இங்கு வரும் ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு போலிசார் சென்று கண்காணிப்பதை விட இது சுலபம் என சொல்லுகின்றனர். இந்திரபாலின் சகோதரர் அவரை யாராவது தள்ளி விட்டிருக்கலாம் என சொல்வதையும் அவர்கள் மறுக்கின்றனர்.
இயற்கை அன்னை நமக்கு அளித்த மாபெரும் பொக்கிஷங்களில் அருவிகளும் ஒன்று. இயற்கையை ரசிக்க சென்ற இடத்தில் தேவையற்ற சாகசம் செய்து இயற்கை எய்துவது என்பது மாபெரும் மடத்தனம்.