மும்பை,

மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால் இனி சாத்தியம் இல்லைதான். ஏனென்றால் அப்படிப்பட்ட தற்கொலையை தடுக்கும் விதமாக மின்விசிறிகள் விற்பனைக்கு வர உள்ளன. 

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 60 ஆயிரம்பேர் மின்விசிறியில் தூக்கிட்டு இறப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டில் பிரபல மாடல் அழகி நவீஷா ஜோசப் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்தார். மும்பையைச் சேர்ந்த சரத் ஆசானி என்ற மின் பொறியாளருக்கு மாடல் நவீஷாவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாடல் அழகி நவீஷா மரணத்தால் மிகவும் சோர்வடைந்த சரத், இனி யாரும் மின்விசிறியில் தூக்கிட்டு சாகாதபடி கண்டுபிடிப்பை நிகழ்த்தவேண்டும் என விரும்பினார். அப்போது தொடங்கிய அவரது ஆராய்ச்சிப்பணி வெற்றிப் பெற்றுள்ளது. பொதுவாக தூக்கிட்டுக் கொள்வோர் மின்விசிறியின் இரும்புக் கம்பியில் துணியைமாட்டி தொங்கிவிடுகிறார்கள். அதனால் இவர் என்ன செய்தார் என்றால், அந்தக் கம்பி குறிப்பிட்ட எடைக்குமேல் தாங்காத அளவுக்கு அதாவது இறக்கைகளின் எடையை மட்டுமே தாங்கும் அளவுக்கு வடிவமைத்தார்.

அதற்கு மேல் எடை கொண்ட பொருளோ அல்லது மனிதரோ தொங்கினால் தரைக்கு வந்துவிட வேண்டியதுதான்.

ஏனென்றால் மின்விசிறியின் கம்பி ஸ்பிரிங்கில் பிணைக்கப்பட்டு கூறையில் மாட்டப்பட்டிருக்கும்.

இந்த மெக்கானிசத்தின் மூலம் மினி விசிறியில் தூக்கிட்டுக் கொள்வோரை சிறிதும் காயமன்றி  காப்பாற்றி விடலாம் என்கிறார் சரத்.  இதுமட்டுமல்ல கம்பியுடன் எச்சரிக்கை மணியும் பொருத்த உள்ளார். அந்தக் கம்பியின் மீது லேசாக கைபட்டால்கூட அலாரத்தை  எழுப்பிவிடுமாம்.

சரத்தின் புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக் குறித்து சரத் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை பரிசோதித்து விட்டதாக கூறினார். மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம்   கம்பிகளை தயாரிக்க விருப்பதாகவும், கல்லூரி விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு இலவசமாக வழங்கவிருப்பதாக கூறினார்.

குட் லைப் என பெயரிட்டுள்ள இந்தக் கம்பி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதன்  விலை ரூ.250 தானாம்.