ஊரடங்கில் 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களுக்கு தடை தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளை திறக்கவேண்டும் என்று இந்திய மல்டிப்ளெக்ஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய மல்டிப்ளெக்ஸ் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் பெரும்பாலான நாடுகள் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துவிட்டன. இங்குள்ள திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சினிமா அனுபவத்தை நாங்கள் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். சினிமாத்துறை என்பது இந்தியா கலாச்சாரத்தின் நிலையான அங்கம் மட்டுமல்ல, லட்சக்கணக்கானோரின் வாழ்வுக்கு ஆதாரமான விளங்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள #SupportMovieTheatres என்ற ஹேஷ்டேக்கிற்கு பல்வேறு இந்தியத் திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். இதனால் இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. தற்போது வரை தயாரிப்பாளர் போனி கபூர், ‘பாகுபலி’ தயாரிப்பாளர் ஷோபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.