டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெவிரித்துள்ளது. அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். தமிழ்நாடு, கேரள விவசாயிகளின் பாசனத்துக்கு பயன்படும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது. அதில் முழு கொள்அளவு நீரை தேக்கி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. அத்துடன், அதைத்தொடர்ந்து அணையின் உறுதித்தன்மை குறித்து அணையில் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்ப தற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது. இந்த கண்காணிப்பு குழுவினர் அவ்வப்போது அணையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில், சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே இருப்பதால் பாதுகாப்பு பற்றி பேச இனி எதுவுமில்லை. அணை கதவுகள், மதகுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டன. இன்னும் இருக்கும் சிறு விறு வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.