டெல்லி: முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய அரசு  உச்ச நீதிமன்றத்தில்   தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின்  தண்ணீர் தேக்குவது தொடர்பாக கேரள அரசு உச்சநீமிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில், அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட்டதுடன் 3 பேர் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்புக்குழு மற்றும் 5 பேர் கொண்ட துணைக்குழுவை நியமித்தது.

இந்த குழுவினர்,  முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதிகளிள், மற்றும் அணையில் உள்ள  13 மதகுகளை இயக்கியும் ஆய்வுகள் நடத்தவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியது.

அதன்படி,  கடந்த 15 நாட்களுக்க முன்பு  மத்திய தலைமை கண்காணிப்புக் குழுத்தலைவரும், மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையிலான குழு ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இதற்கிடையில், இந்த குழுவின்  அணை பாதுகாப்பு துணைக் குழுவை கலைக்கக் கோரி கேரளாவை சேர்ந்த ஜோய் ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய நீர்வள ஆணையம் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில்,  மனுதாரர் கூறியதுபோல, துணைக் குழு அமைத்தது சட்ட விரோதம் இல்லை என்றும், கண்காணிப்பு குழு தனது அதிகாரத்தை துணைக் குழுவுக்கு அளித்திருப்பதாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது, கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்ற உத்தரவுபடியே அமைக்கப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பை அவ்வப்போது கண்காணிக்கவும், குறிப்பாக பருவ மழைக்கு முன்னரும், பருவ மழையின்போது அணையின் பாதுகாப்பை கண்காணித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவே துணை குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது  என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து,  கேரளாவைச் சேர்ந்த  ஜோய் ஜோசப் தாக்கல் செய்துள்ள ரிட் மனு சட்ட ரீதியாக எந்த முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.