மும்பை

ரிலையன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல எனக் கூறி உள்ளார்.

நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஒரு கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ளார்.  அந்த கருத்தரங்கில் அவர் சிறப்புரை நிகழ்த்தி உள்ளார்.  அந்த உரையில் தன்னைப் பற்றி சில கருத்துக்களை கூறி உள்ளார்.

முகேஷ் அம்பானி, “எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல.  பணத்தைப் பற்றி என் வாழ்க்கையில் நான் என்றுமே கவலைப்பட்டதில்லை.  என்னைப் பொறுத்தவரை பணம் என்பது எனது வர்த்தகத்தை விரிவாக்க உதவும் ஒரு பொருள் என்னும் ரீதியில் தான் நான் பணத்தைப் பார்க்கிறேன்.  பல புதிய சவால்கள், சில வியாபார அச்சுறுத்தல்கள் இவைகளை சமாளிக்க மட்டுமே எனக்கு பணம் தேவைப்படுகிறது.

என் சிறுவயது முதல் இன்று வரை நான் எனது சட்டைப்பையில் பணம் வைத்துக் கொள்வது கிடையாது.  அதே போல கிரெடிட் கார்டுகளும் என்னிடம் கிடையவே கிடையாது.  என்னுடைய அனைத்துச் செலவுகளுக்கான தொகையை என் உடன் இருப்பவர்கள் தான் இது வரை செலுத்தி உள்ளனர்.  ஒரு வேளை என்னிடம் பணம் சேர்ந்ததற்கான முக்கியமான காரணம் இதுவாகவே இருக்கலாம்” என தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.