சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல்வரின் முகவரித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதல்வரின் முகவரித் துறையில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அவர் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களின் போது பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 1.1.2023 முதல் 30.06.2023 வரை முதல்வரின் முகவரித் துறை மூலமாக பெறப்பட்ட 3.42 இலட்சம் மனுக்களில் 2.94 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது 86% சதவிகித மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மனுக்களின் தீர்வு முறைகளில், எண்ணிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், தீர்வின் தன்மையை பொறுத்து தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் A, B & C என தர வரிசைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு தீர்வு செய்யப்பட்ட மனுக்களின் தர வரிசை மதிப்பீடுகளை அவர் ஆய்வு செய்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளில் அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி விரைவில் மனுக்கள் மீது தீர்வு காணுமாறு அவர் அறிவுரை வழங்கினார்.
மேலும், முதலமைச்சரின் உதவி மையத்தின் இலவச அழைப்பு எண் 1100 மூலமாக தொடர்பு கொள்ளும் நபர்களின் அழைப்புகளை ஏற்பது, அழைப்பின் தன்மையைப் பொறுத்து கோரிக்கைகளாக பதிவு செய்வது, ஏற்கனவே பதிவு செய்த மனுவின் நிலவரம் குறித்து தெரியப்படுத்துவது மற்றும் மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மனுக்களின் தரம் கண்காணித்தல் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சேவைகளின் மதிப்பீடுகள் பெறுவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் Al Chatbot போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக விரைவாக பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்வு காண புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட ஆய்வின்போது, மனுதாரர்களின் கோரிக்கைகள் தீர்வு காணப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் பொருட்டு, அவர், ஒரு சில மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரரின் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.22 இலட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 19.06.2023 அன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்தும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தைச் சேர்ந்த மாணவி பட்டப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000/- வழங்கப்பட்டது குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மனுக்களை திறம்படவும், விரைவாகவும் தீர்வு செய்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி மற்றும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயபால் ஆகியோரை பாராட்டியும், சுணக்கமாக செயல்படும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.