சிட்னி: தனது குடும்பத்தில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக, இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு டி-20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.
இவரின் விலகல் ஆஸ்திரேலிய அணியை சற்று பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டி-20 போட்டியில் ஆடிய ஸ்டார்க், ஷிகர் தவான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக, கான்பெராவிலிருந்து சிட்னி வந்தடைந்த 30 வயதான ஸ்டார்க், தனது குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட செய்தியறிந்தவுடன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
“இந்த உலகத்தில், ஒருவருக்கு, அவரின் குடும்பத்தை தவிர வேறு முக்கியமான விஷயங்கள் கிடையாது. எனவே, இந்த விஷயத்தில் மிட்செல்லும் விதிவிலக்கு கிடையாது.
தனது சூழலை சரிசெய்துகொண்டு, எப்போது விரும்புகிறாரோ, அப்போது அணிக்கு அவர் திரும்பலாம்” என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.