சென்னை: சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட மாக சென்னையில் மே மாதம் மின்சார பேருந்து சேவைகள் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் மட்டும் முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் EiV12 மின்சார பேருந்துகளை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த பேருந்துகள் தயாராகி உள்ளது. இந்தத மின்சார ஏ.சி. பேருந்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஜெர்மன் வங்கியின் நிதியுதவியின் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்த ஒப்பந்த முறையில் (ஜிசிசி) மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டர் விடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ஏசி, குளிர்சாதன வசதியில்லா பேருந்து என 625 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை உட்பட 35 இருக்கைகள் இருக்கும்.
இந்த பேருந்துகளுக்கான மின்னேற்றம் உள்ளிட்ட வசதிகளுக்காக அடையாறு, அயனாவரம் உள்ளிட்ட 5 பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுநர் மற்றும் பராமரிப்புப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனித்துக் கொள்ளும். மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நடத்துநர் மட்டும் பேருந்தில் பணியில் இருப்பார்.
அமைச்சர் ஏற்கெனவே கூறியபடி, மின்சார பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். தாழ்தளப் பேருந்துகளாக இருப்பதால் முதியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பேருந்துகள் தற்போது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஆய்வில் இருக்கிறது. ஒப்புதல் வழங்கியவுடன் மே மாதம் முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்க மத்திய அரசு முடிவு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, 57,613 கோடி ரூபாய் மதிப்பில் PM மின்சார சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, மின்சார பேருந்துகள் இயக்கும் இந்த திட்டத்தை அரசு மட்டும் தனியாக செய்யாமல் அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் படி இந்தியா முழுவதும் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும், தமிழக போக்குவரத்து துறை சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகள் சிஎன்சி பேருந்துகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள் மற்றும் ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு, 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளளது.
இந்த மின்சார பேருந்துகள் எல்லாம் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். குறிப்பிட்ட மின்சார பேருந்துகளில் ஏசி, சார்ஜிங், சொகுசு இருக்கை கொண்ட சொகுசு பேருந்துகளாக இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.