கரூர்
கரூர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலிஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை செய்தனர். விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பலரை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
சுமார் 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. காவல்துரையினர் கேரளா மாநிலம் திருச்சூரில் ஜூலை 16ம் தேதி கைது செய்து கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையிலும், பிரவீணை குளித்தலை கிளை சிறையிலும் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி கரூர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று இந்த மனு கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதி பரத்குமார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையொட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் காந்தி கிராமம் சின்னப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.