முத்தமிட்டு கொரோனாவை குணப்படுத்துவேன் சவால் விட்ட முஸ்லிம் சாமியார் கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் பெற்றவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அஸ்லாம் பாபா என்று சாமியார் ஒருவர், முத்தத்தால் கொரோனாவை கட்டுப்படுவதுவதாக கூறி, பக்தர்களின் கைகளில் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஆனால், தற்போது அந்த சாமியாரே கொரோனாவுக்கு பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி வருகிறார். தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தன்னால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று பீலா விட்டு வந்தார். இதையடுத்து, கொரோனா அச்சத்துடன் வாழ்ந்து வந்த பல பக்தர்கள், அவரை நாடி வந்தனர்.
அவர்களின் கைகளில் முத்தமிட்டு, கொரோனா போயே பேச்சு என்று கூறி வந்துள்ளார். இவ்வாறு ஏராளமானோ ருக்கு அவர் முத்தம் கொடுத்த நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான ஏதோ ஒரு நபரிடம் இருந்து சாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அந்த சாமியாரிடம் முத்தம் பெற்று சென்றவர்களை மத்திய பிரதேசம் மாநில சுகாதார துறையினர் தேடி பிடித்து வருகின்றன்ர. இதுவரை முத்தம் மூலம் 24 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சாமியார் வசித்து வந்த ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது, அஸ்லம் பாபா பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை ஒழிக்க முத்தம் கொடுப்பதாக கூறிய சாமியாரை கொரோனாவே பலி வாங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.