சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பி.டி.எஸ். இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிகழாண்டில் 569 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேரும் என மொத்தம் 36,100 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார்.