மண்ணை தோண்டியவருக்குக் கிடைத்த ரூ. 50 லட்சம் வைரம்…
மத்தியப்பிரதேச மாநிலம் கன்னா மாவட்டம் வைரச்சுரங்கங்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு, மண்ணைத்தோண்டினால், அதிர்ஷ்டம் உள்ளவருக்கு வைரம் கிடைக்கும்.
அங்குள்ள ராணிப்பூர் என்ற இடத்தில் வைரச்சுரங்கம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துள்ளார், ஆனந்திலால் குஷ்வா என்பவர்.
பெற்றோருடன் குஷ்வா, அன்றைக்கு மண் தோண்டிக்கொண்டிருந்தபோது பூமிக்கு அடியில் வைரத்துண்டு பளபளவென கண்ணைப் பறித்தது.
10.69 ’கேரட்’ வைரம்.
மயங்கி விழாத குறையாக அந்த வைரத்தை , அரசுக்குச் சொந்தமான வைர அலுவலகத்தில் ‘டெபாசிட்’ செய்துள்ளார்.அதன் மதிப்பு அதிகாரிகளால், அறிவிக்கப்படாத நிலையில், குறைந்தது 50 லட்சம் ரூபாய் பெறும் என உள்ளூர் வியாபாரிகள் கணித்துள்ளனர்.
இந்த வைரம் பொதுமக்கள் மத்தியில் ஏலம் விடப்படும்.
அரசுக்குச் சேர வேண்டிய ’ராயல்டி’ மற்றும் வரி நீங்கலாக மிச்சத்தொகை ஆனந்திலாலுக்கு கிடைக்கும்.
‘’இந்த சுரங்கத்தில் மேலும் பல இடங்களில் வைரம் புதைந்துள்ளது. முழு மூச்சாக இனி மண் தோண்டுவது தான் எங்கள் வேலை’’ என்கிறார், ஆனந்தி லால்.
-பா.பாரதி.