ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு..

பீகார் மாநிலத்தில் கொரோனாவுக்கு பா.ஜ.க. எம்.எல்.சி. ஒருவர் உயிர் இழந்த நிலையில், இரண்டு அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு ஆணையைக் காற்றில் பறக்க விட்டு, எம்.எல்.ஏ. ஒருவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அவர் பெயர்- சாம்பு நாத் யாதவ்.

பக்சர் மாவட்டம் பெர்காம்பூர் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.வான அவர், தனது தொகுதியில் நடந்த விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அவர் மீதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முதல் –அமைச்சர் நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள போகனா என்ற ஊரில் மது விருந்து நடத்தி ஆட்டம் –பாட்டம் எனக் கொண்டாட்டம் போட்ட  கிராமத்தார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், அந்த விருந்தில் பலர் குடித்து விட்டு, பெண்களுடன் ஆபாசமான முறையில் நடனம்  ஆடும் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

-பா.பாரதி.