சாகர், மத்தியப் பிரதேசம்

த்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் பிறப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14% லிருந்து 27% ஆக அதிகரிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானது விவசாயக் கடன் தள்ளுபடி ஆகும். அம்மாநில முதல்வராக கமல்நாத் பதவியில் உள்ளார். அங்கு ஆட்சி அமைத்த உடன் கமல்நாத் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவ்வகையில் நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை விவசாயிகளுக்கு கமல்நாத் வழங்கினார். அந்த கூட்டத்தில் கமல்நாத் உரையாற்றினர். அப்போது அவர், “மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு 14% ஆக உள்ளது.

அதை அரசு 27% ஆக உயர்த்த உள்ளது. இது குறித்த விவரமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விரைவில் மத்தியப் பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அரசு அனைத்து வகுப்பு மக்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறது.” என தெரிவித்தார்.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரஜனீஷ் அகர்வால், “இந்த இரு அறிவிப்புகளுமே அரசின் உத்தரவு அல்லது சுற்றரிக்கையின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களில் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த அறிவிப்புகள் செல்லாததாகி விடும்” என தெரிவித்துள்ளார்.