போபால்
பிரதமர் மோடி நாளை மத்தியப்பிரதேசத்தில் பங்கேற்கும் மாநாட்டுக்கு பல சலுகைகளை மத்தியப் பிரதேச அரசு அளித்துள்ளது.
கடந்த புதன்கிழமை மத்திய அரசு அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது நாளை அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அன்று ஜன்ஜதியா கவுரவ் திவஸ் அதாவது பழங்குடியினரைப் பெருமைப் படுத்தும் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தினம் நாளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மத்தியப்பிரதேச மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகிறார். அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், “இம்மாநாடு குறித்துப் பரபரப்பு நிலவுகிறது. இதற்கு வரும் சகோதர சகோதரிகள் பாதுகாப்புடன் விடு திரும்பும் வரை அவர்களுடைய உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளில் குறை இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளார்.
இந்த மாநாட்டுக்காக அரசு அளிக்கும் சலுகைகளில் சில பின் வருமாறு:
* மாநாட்டிற்குப் பழங்குடியினரை அழைத்து வரும் பேருந்துகள் நடுவழியில் பழுதானால், அவற்றை உடனடியாக சரிசெய்ய மெக்கானிக்குகள் தயார் நிலையில் இருப்பார்கள்.
* பேருந்துகளுடன் ஆம்புலன்சும் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பேருந்துகளின் தகுதி சான்று, ஓட்டுநர் குடிபோதை பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
* பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்ள போபால் வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கவரி (டோல்கேட்) விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
* மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது.