டில்லி

கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிறுத்தப்படவில்லை எனில் மறியல் போராட்டம் நடைபெறும் எனக் காங்கிரஸ் எம் பி எச்சரித்துள்ளார்.

கொல்லம் விரைவு ரயில் சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இது திருச்சி,மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வழியாகக் கொல்லம் சென்றடைகிறது.

இந்த ரயில் கடந்த 2016ம் ஆண்டு தொடக்கம் வரை சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அதன் பிறகு சிவகாசி ரயில் நிலையத்தில் இப்போது வரை அந்த விரைவு ரயில் நிறுத்துவது இல்லை. இன்றைய தினம் மக்களவையில் இது குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசி உள்ளார்,

அவர்,

“குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் தொழில் நகரமான சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கி உள்ளது.  ஆனால் சென்னை-கொல்லம் ரயில் 2016ம் ஆண்டு முதல் சிவகாசியில் நிற்காமல் சென்று வருகிறது.

ஆகவே தொழில் நகரமான சிவகாசியில் சென்னை-கொல்லம் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2021 செப்டம்பர் 21ம் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயிலைச் சந்தித்து மனு அளித்தோம்.

ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 2022 ஏப்ரல் மாதம் இப்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்தோம்., அந்த மனு மீது. எந்த பதிலும் இல்லை.

எனவே சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முதல் கொல்லம் வரை இயக்கப்படும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை என்றால் செப்டம்பர் 22ம் தேதி என்னுடைய தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு சிவகாசி வஞ்சிக்கப்படுகிறது”

எனத் தெரிவித்துள்ளார்.