டில்லி
மத்திய பிரதேச மாநில மக்களவை உறுப்பினர் அனூப் மிஸ்ரா பிரதமர் கனவு காண்பதோடு நிறுத்தாமல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கூறி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்று மொரேனா. இந்த தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினரான அனூப் மிஸ்ரா பாஜக வை சேர்ந்தவர். இவர் பாராளுமன்றத்தில் தனது தொகுதியின் முன்னேற்றமின்மை பற்றி சமீபத்தில் உரை ஆற்றினார்.
அவர் தனது உரையில், “பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பல நல்ல திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஆனால் அவை சரியாக நடைமுறை படுத்தப் படாததால் மக்களுக்கு அதன் பயன்கள் போய் சேருவதில்லை. அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்த அரசு மிகவும் பலவீனமாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான தொகை கடந்த மூன்று வருடங்களாக வழங்கப்படவில்லை. இதற்கு யார் பொறுப்பு. பிரதமரின் கனவுத் திட்டம் என அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எனது தொகுதியில் கழிப்பறைகள் கட்டுவது மிகவும் குறைவாக உள்ளது. பிரதமர் கனவு கண்டால் மட்டும் போதாது, அந்த கனவை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மொத்தம் 703 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ள எனது தொகுதியில் 133 கிராம பஞ்சாயத்துக்களில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.